லேடீஸ் ஒன்லி
'கும்மென்ற' ஒலியை மட்டும் கேட்டுக்கொண்டிருந்த போது திடீரென தன் வீடு அதிர ஆரம்பித்ததை உணர்ந்தது, அந்த கருவிலிருந்த குழந்தை !
கையில் சுமையுடனும், வயிற்றில் இறக்கி வைக்க முடியாத சுமையுடனும் நெடு நேரமாய் நின்றுகொண்டிருந்த அந்த கர்ப்பிணிப் பெண் நிறுத்தத்தில் நிறுத்தாத பேருந்திற்காக ஓடும் போது, அந்த அதிர்வை உணர்ந்தது அந்த குழந்தை !
ஒற்றைக் காலையே ஓரமாய் மட்டுமே வைக்க முடிந்த படிக்கட்டில் அந்தப் பெண் ஏற தாராளமாய் இடமளித்தனர் அங்கு தொங்கிக்கொண்டிருந்த ஆண்கள். படியேறி பிடியில்லாமல் நின்றவளை விழுந்துவிடாமல் பாதுகாக்க அவளறியாமல் அவள் முதுகின் பின் தடுப்பமைத்தனர் அங்கு ஒற்றைக்காலில் தொங்கிக்கொண்டிருந்தவர்கள்.
முன்படியருகே முண்டியடித்து டிக்கெட் வாங்கிக்கொண்டிருந்த கண்டக்டர் சத்தமாய்க் கத்தினார், "ஏம்பா வழிவிடு, வழிவிடு, அந்தம்மா படிலயே நிக்குது பாரு, தள்ளி வாம்மா உள்ள, வா உள்ள".
ஏமாந்து போய் மார்க்கெட்டில் காய் வாங்கிக்கொண்டு, அதைக் கொண்டு போய் வீட்டில் தந்து திட்டும் வாங்கப் போகிற தாத்தா, கீழே வைத்திருந்த பையை தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு அந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு நிற்க இடமளித்தார்.
நிலையான வேகத்தில் சென்றுகொண்டிருந்த பேருந்தின் முன்னே சொந்த வீட்டுக்குள் ஸ்கூட்டி ஓட்டுவதைப் போல சென்றுகொண்டிருந்த ஸ்கூட்டி ஓட்டி பெண் திடீரென வலது புறமாய்த் திரும்பிவிட ட்ரைவரின் கவனத்தினால் திடீரென ப்ரேக்கு உள்ளானது அந்த பேருந்து. மூன்றாவது சீட்டில் அமர்ந்திருந்த ஆண்ட்டி பக்கத்திலிருந்த புர்கா போட்ட பெண்ணிடம் " ஓட்றான் பாரு, அவங்கப்பன் வீட்டு வண்டி மாதிரி ".
வயிற்றிலிருந்த குழந்தை இறுக்கம் தாளாமல் உள்ளேயே அழத்தொடங்கியது, சுமப்பவளுக்கு மட்டுமே கேட்காமல் கேட்டது.
வெகு சில நொடிகளில் இதெல்லாம் நடந்துவிட, படியேறியது கர்ப்பிணிப் பெண் எனத் தெரிந்ததும் இங்கொன்றும், அங்கொன்றுமாக 'சட்', 'சட்' என சீட்டில் அமர்ந்திருந்த ஆண்கள் எழத்தொடங்கினர்.
வெவ்வேறு குரல்கள், " வாம்மா உக்காரு, இங்க உக்காருங்க ஆண்டி, கா இங்க உக்காருங்க கா, மேடம் இப்டி உட்காருங்க", தூரத்தில் இருந்து டிக்கெட் கொடுத்துக்கொண்டே கண்டக்டர் "மா எங்கயாச்சும் உக்காரு மா, எங்கயாச்சும் இடிச்சிக்கப் போற, இந்தாளு வேற (ட்ரைவர்) இஷ்டத்துக்கும் ஓட்றாரு" (கண்டக்டருக்கு ஸ்கூட்டி விஷயம் தெரியாது)...
'புகை பிடிக்கக்கூடாது'ன்ற ஸ்டிக்கருக்குக் கீழே அமர்ந்திருந்த பெண் நடப்பவையெல்லாம் காதில் கேட்டும் கேட்காததைப் போல வெளியே பார்வையை பதிந்திருந்தார்...
'ஆண்கள்'ன்ற ஸ்டிக்கருக்குக் கீழே அமர்ந்திருந்த பெண் 'சீக்கிரமாய் ஸ்கூட்டி வாங்கிடனும், இல்லேன்னா நாளைக்கு நாமளும் கர்ப்பமாயிட்டா இப்டி பஸ்லயெல்லாம் வந்து அவஸ்தப்பட வேண்டியதாயிருக்கும்' எனும் எண்ணத்துடன் நடப்பதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தார்.
தாய்மையை உயர்வாக எண்ணும் பெண்களாவது கொஞ்சம் கர்ப்பிணிப் பெண்களுக்கு இடமளித்துப் பழகுங்கள்.
தொப்பையைச் சுமப்பவர்களே புரிந்துகொள்ளும் போது கருவைச் சுமப்பவர்கள் சற்று புரிந்துகொள்ளலாமில்லையா?
குறைந்தபட்ச உதவியாக ஆண்களுடைய இடங்களிலாவது அமர்வதைத் தவிருங்கள்.
ஆண்களுக்கு இடஒதுக்கீடெல்லாம் தேவையில்லை, குறைந்தபட்சம், ஆண்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தையேனும் அவர்களுக்கு அளித்திடுங்கள்.
ஆணாதிக்க உலகமென ஆண்களையே நம்பவைக்கும் உலகில் உள்ளார்ந்து சிந்திப்போமானால் நடிகர்களை விட இயக்குனர்களே மேலானவர்கள் என்பது நமக்கும் விளங்கும்.
இது அனைத்து பெண்களுக்குமான பொதுவான பதிவல்ல, (சில) பெண்களுக்கு, பெண்கள் மீதான மனிதாபிமானத்தை நினைவுகூறும் பதிவு, அத்தோடு கூட பெரும்பாலான ஆண்களும் கூட ஏமாளிகள் தான்.
அதெல்லாம் சரி, பேருந்தில் சென்ற அந்த பெண் அமர்ந்தாளா என தோன்றுகிறதா? நீங்கள் இடமளிப்பீர்களா என யோசித்துப் பாருங்கள், நீங்கள் அளிக்கத் தயாராயிருந்தால் அவள் அமர்ந்ததைப் போலத்தான் !
நன்றி.
கருத்துகள் மதிக்கப்படும். கீழுள்ள கமெண்ட் பெட்டியில் இடுங்கள். தவறுகளை தெரிவியுங்கள், சரி இருந்தாலும் சரி.
ரம்யன்,
A9791515695@gmail.com


அருமையான பதிவு சகோ,
ReplyDelete